Friday, 20 November 2009

தமிழினத்தலைவன் தேசியத்தலைவனானதால் வந்த வினை ?



எமது தலைவன் மாறிவிட்டான்,அவனை மாற்றியது காலமா இல்லை காங்கிரஸா, அதை பற்றி நான் இங்கு எழுத போவதில்லை. துக்ளக் சோ, ஜெ இவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளை பயங்கரவாத இயக்கம் என குற்றம் சாட்டிய போது அவர்களை எதிர்த்து எம் தலைவன் இட்ட அறிக்கைகள் எராளம். இன்றோ இலங்கை தமிழனின் இன்றைய இழிநிலைக்கு காரணம் பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கமே என்பதை தெள்ள தெளிவாக, சமநிலையோடு ஆய்வு செய்து அறிவித்து விட்டான்.

எம் தலைவன் ஈழ தமிழனின் துயர் துடைக்க அறப்போராட்டங்களான சாலைமறியல்,ரயில் மறியல்,பந்த் போன்றவற்றை நடத்தியுள்ளான் ஆனால் அவற்றை மெச்ச யாருமில்லை. ‘டெசோ’ என்ற இயக்கத்தை உருவாக்கி, அதில் அனைத்து போராளி குழுக்களை இணைத்து அதற்கு தலைமையேற்று, ஈழ தமிழனின் வாழ்வு மலர அரும்பாடு பட்டபோது, வெண்ணைய் திரண்டு வரும்போழ்து தாழி உடைந்த கதையாக பிரபாகரனும் அவனின் விடுதலைபுலிகளின் இயக்கம், சக போராளி குழுக்களை அழித்து இலங்கை அரசுக்கு மறைமுகமாக பேருதவி செய்தது. இதை எம் தலைவன் குறிப்பிட்ட போது நெடுமாறன் போன்ற புல்ருவிகள் கூக்குரலிடுகின்றனர்.


அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதி படையினை அனுப்பி ஈழ தமிழனை வதைத்த போது அவன் செய்த ஆர்பாட்டங்களை சொல்லி மாளாது. புலிகளுக்கும், இந்திய படைக்கும் போர் முண்ட போது தமிழன் என்ற உணர்வினால் புலிகளை ஆதரித்தான். அதே புலிகள், தமிழக மண்ணில் ராஜிவ் காந்தியை படுகொலை செய்த போது எமது தலைவன் தான் முதலில் ஓரு இந்தியன் பின்னர் தமிழன் என்பதனை உணர்ந்தான்.


தன்னை கொல்ல சதி நடக்கிறது என்றும் அதன் காரணமாக வைகோ-வை கட்சியிலிருந்து நீக்கினான் ( பின்னர் கூட்டணியில் சேர்த்தது வேறு விஷயம் ). இது எம் தலைவனுக்கு புலிகளின் மேலிருந்த அபிமானத்தை மாற்றியது, இதை நிங்களும் ஆமோதித்தால் நான் அதற்கு உடன் படுகிறேன்??!!

ஜனநாயகம் என்றால் என்னவன்று கேட்கும் புலிகளுக்கு, தமது கட்சியில் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை உதாரணத்தோடு விளக்கியதை யாரும் மறக்க முடியாது. ஓரு நிரூபர் தங்கள் மகனை கட்சியில் உங்கள் வாரிசாக நியமிக்க போவதாக பேச்சு அடிபடுகிறதே என்று கேட்க, அதற்கு எம் தலைவன், ‘ தி.மு.க என்ன காஞ்சி சங்கர மடமா வாரிசினை நியமிக்க என கோபபட்டான்’ ஆனால் இன்றோ, தன் மகனை துணை முதல்வராக்கி அழகு பார்கின்றான் இது வேறு கதை.

மாத்தையா, அன்பழகன் போன்று எம் தலைவனுக்கு கட்டு பட்டவன் இல்லை, இதை அறியாத எம் தலைவன், பிரபாகரன் தனக்கு தெரிந்த ஜனநாயக முறைபடி மாத்தையா மற்றும் ஏனைய தலைவர்களின் கதையை முடித்ததை குறை கூறுவதை பிறர் ஏற்காமல் நகைப்பது அழகல்ல.

பிரபாகரனின் சர்வாதிகார போக்கினால் புலிகளின் இயக்கத்தில் பிளவு ஏற்கபட்டது, இதை பயன்படுத்தி இலங்கை அரசு புலிகளை இந்திய அரசின் உதவியுடன் அழித்தது. பிரபாகரன் தான் அழிந்தது மாத்திரம் அல்லாது இலங்கை தமிழனின் வாழ்க்கையினையும் சேர்த்து அழித்ததை யாரலும் மறுக்க முடியாது.

அன்று பிரபாகரனிடமிருந்து கற்ற பாடத்தினால் எம் தமிழினத்தலைவன் இன்று அடிமைபட்டு, சிறுமைபட்டு கிடக்கும் ஈழ தமிழனின் இழி நிலையினை கண்டு மவுனமாக தனக்குள் அழுகின்றான். உலக தமிழினமே உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் எம் தலைவனின் மன வலியினை இலங்கை தமிழனின் வாழ்க்கை போன்று கேலிக்குரியதாக்காதிகர்கள்.